சினிமா கேள்வி-பதில்கள் : குருவியார்


சினிமா கேள்வி-பதில்கள் : குருவியார்
x

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி: குத்துப்பாடலுக்கு என ஆட்டம் போட தற்போது தனியாக கவர்ச்சி நடிகைகள் வருவதில்லையே, ஏன்? (இ.ராஜூ, நரசிம்மன், தியாகராயநகர், சென்னை-17)

பதில்: 'கொஞ்சம் சேர்த்து கொடுத்தால், அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்', என்ற 'ரேஞ்ச்'சுக்கு கதாநாயகிகளே வந்துவிட்டார்கள்!

கேள்வி: சிம்புவின் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவை அணுகிய படக்குழு அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாமே... (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்: இருக்காதா பின்னே... 'பட்ஜெட்'டில் பாதியை கேட்டுவிட்டாராம். அதனால் அதிர்ச்சியில் உடனே அங்கிருந்து 'யு-டர்ன்' போட்டுவிட்டார்களாம்!

கேள்வி: அஞ்சலி பேரழகி போல தெரிகிறார். அவரை காதலிக்க ஆசைப்படுகிறேன். நடக்குமா? (உத்தமன், விக்கிரவாண்டி)

பதில்: அஞ்சலி மிகவும் கண்டிப்பானவர். அவருக்கு பொய் சொன்னாலே பிடிக்காது. எனவே வாய்ப்பு குறைவு தான்!

கேள்வி: நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மாப்பிள்ளை தேடுவதாக கேள்விப்பட்டேன். உண்மையா? (ஆர்.கதிரேசன், கள்விளை)

பதில்: உண்மை தான். அந்த மும்பை அழகிக்கு 'பாடி பில்டர்' டைப்பில் தான் மாப்பிள்ளை வேண்டுமாம். உயரம் குறைவாக இருந்தாலும் பிரச்சினை இல்லையாம்!

கேள்வி: ராஷ்மிகா - ஐஸ்வர்யா ராஜேஷ் பிரச்சினை ஓய்ந்ததா? (எபினேசர், ராமநாதபுரம்)

பதில்: நல்ல வார்த்தை கூறி ராஷ்மிகாவே முடிவுக்கு கொண்டுவந்து விட்டார். பிரச்சினை சுமூகமாகவே முடிந்துவிட்டது!

கேள்வி: 'பூஜை' படத்தின் 2-ம் பாகம் வருமா? (டி.செல்வம், பூங்காவனம்)

பதில்: அந்த படத்துக்கு 'பூஜை' போடமுடியாது என ஹரி திட்டவட்டமாக கூறிவிட்டாராம்!

கேள்வி: தனுஷ் நீண்ட தாடியுடன் வலம் வருகிறாரே, ஏதாவது வேண்டுதலா? (ரவிக்குமார், நெல்லை)

பதில்: 'கேப்டன் மில்லர்' படத்துக்கான தோற்றம் அது. மற்றபடி ஒன்றும் இல்லை!

கேள்வி: 'ஆதிபுருஷ்' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சனோன் மிகவும் சிரமப்பட்டாராமே? (ஜே.மெரிட்டோ, அடைக்கலாபுரம், திருச்செந்தூர்)

பதில்: ஆமாம். சேலை கட்டவே பல மணி நேரம் பயிற்சி எடுத்தாராம்!

கேள்வி: கீர்த்தி சுரேசுக்கு துபாய் தொழில் அதிபருடன் காதலாமே? (மல்லிகா நடராஜன், திருவண்ணாமலை)

பதில்: 'இல்லவே இல்லை' என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் கீர்த்தி. காதல் வேறு, நட்பு வேறு என்கிறார்!

கேள்வி: ஜனகராஜ் என்றதும் சட்டென நினைவுக்கு வருவது எது? (எஸ்.காமராஜ், விருதுநகர்)

பதில்: 'என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...' என்ற இனிமையான வசனம் தான்!

கேள்வி: 'மைனா' புகழ் நடிகர் விதார்த் என்ன செய்கிறார்? (வத்சலா, ஊட்டி)

பதில்: சாஜிசலீம் இயக்கத்தில் 'லாந்தர்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது!

கேள்வி: சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சூரி என்ன செய்துகொண்டிருந்தார்? (தங்கவேல், அருப்புக்கோட்டை)

பதில்: சின்னத்திரை தொடர்களில் நடித்தார்!

கேள்வி: தமிழ் சினிமாவில் மிகவும் அதிர்ஷ்டசாலியான நடிகை யார்? (த.ராம்பிரியா, மதுரை)

பதில்: நயன்தாரா தான். 15 ஆண்டு சினிமா பயணத்தில் எத்தனை ஏற்ற-இறக்கங்களை சந்தித்தாலும் இன்னும் அரியணையை தக்கவைத்து வருகிறாரே..!

கேள்வி: சிறிய வயதில் தேசிய விருது பெற்ற நடிகை யார்? (குமரகுரு, நாட்டரசன்கோட்டை)

பதில்: இந்திய திரைப்பட நடிகைகளிலேயே குறைந்த வயதிலேயே (17) தேசியவிருது பெற்ற நடிகை ஷோபா தான். 'பசி' படத்துக்காக பெற்றார். குறுகிய கால நடிப்பால் ஏராளமான ரசிகர்கள் நெஞ்சில் இடம்பிடித்தார்!

கேள்வி: சமந்தாவுக்கும், ராஷ்மிகாவுக்கும் சண்டையாமே... (விமல், நரிக்குடி)

பதில்: வெறும் தொழில் போட்டி தான்... சக்காளத்தி சண்டையெல்லாம் கிடையாது!

கேள்வி:- தமன்னாவுக்கு செல்லப்பெயர் எதுவும் இருக்கிறதா? (தீனதயாளன், காரைக்குடி)

பதில்: 'மில்க்கி பியூட்டி' என்று அவரை செல்லமாக கூப்பிடுகிறார்களாம்!

கேள்வி: கமல்ஹாசனின் 'மருதநாயகம்' திரைப்படம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா? (கமல் ராஜா, அடையாறு, சென்னை)

பதில்: வந்தால் நன்றாக இருக்கும்!

கேள்வி: 'விடாமுயற்சி' படத்தில் அஜித்குமார் ஜோடி யார்? (டி.ராஜகுமார், ஊட்டி)

பதில்: பந்தயத்தில் திரிஷா முன்னிலையில் இருக்கிறார்!

கேள்வி: சில பிரபல தமிழ் நடிகர்களின் வாரிசுகள் திரையில் ஜொலிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்? (ஊர்வசி, ராஜமங்கலம்)

பதில்: அதிர்ஷ்டம் கைகொடுக்காததே காரணம்!

கேள்வி: குருவியாரே, 'சில்க்' ஸ்மிதாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்னவோ? (ஜெ.மணிகண்டன், ஏ.கஸ்பா, ஆம்பூர்)

பதில்: விழியிலும், அவர் பேசும் போதை மொழியிலும் இருக்கும் 'கிக்' தான்!

கேள்வி: 'கரகாட்டக்காரன்' படத்தில் வரும் 'சொப்பன சுந்தரி'யின் கார் பற்றி தெரிந்துவிட்டது. அந்த சொப்பன சுந்தரி பற்றி... (உமாசங்கர், திருவெண்ணெய்நல்லூர்)

பதில்: அது கதை எழுதிய கங்கை அமரனுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியமாம்!

கேள்வி: திருமணத்துக்கு பின்னரும் நடிகைகள் சினிமாவில் 2-வது இன்னிங்க்ஸ் ஆட வருவது ஏன்? (கோமதிநாயகம், பரமக்குடி)

பதில்: காசு… பணம்… துட்டு… மணி… மணி!

கேள்வி: ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் அடிக்கடி திருமணமும், விவாகரத்தும் செய்து கொள்கிறார்களே… (மணிவன்னன், ஆத்தூர்)

பதில்: 'வாழு, வாழ விடு' என்ற பாலிசியை பின்பற்றுகிறார்களாம்!


Next Story