சினிமாவுக்கு மொழி பேதம் இல்லை - நடிகை அதிதிராவ் ஹைதரி
தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் அதிதிராவ் ஹைதரி. செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கிறார்.
சமீப காலமாக புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எப், பொன்னியின் செல்வன், காந்தாரா உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக ஓடி நல்ல வசூல் பார்த்துள்ளன. ஆனாலும் இந்திபடங்கள், தென்னிந்திய படங்கள் என்று பாகுபாடு வலுத்து வருவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று அதிதிராவ் ஹைதரியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, "இந்தி படங்கள், தென்னிந்திய படங்கள் என்ற மொழி பேத சர்ச்சை தேவையற்றது. என்னை பொறுத்தவரை எனக்கு இந்த பேதங்கள் எதுவும் இல்லை. உண்மையில் சினிமாவிற்கு மொழி பேதமே இல்லை. நாம் நம் மக்களுக்காக படங்களை எடுக்கிறோம். எந்த மொழியில் செய்தாலும் சினிமாவின் இறுதி லட்சியம் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதுதான்'' என்றார்.