பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?


பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?
x

பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்முறை செய்ததாக ஜானி மாஸ்டர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்,

சிறந்த நடன இயக்குநராக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் அறிவிக்கப்பட்டார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா ஆகிய ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது விசாரித்த காவல்துறை நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது .மேலும் தன்னுடைய 16 வயதில் ஜானி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் தெரிவித்து இருந்ததால் ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

புகாரில் அந்தப் பெண், "கடந்த 2019-ம் ஆண்டு ஜானி மாஸ்டர், எனக்கு உதவி நடன இயக்குநர் வேலை கொடுத்தார். படப்பிடிப்புக்காக சென்னை, மும்பைக்கு சென்றிருந்தோம். அப்போது 18 வயது நிரம்பாத நிலையில், திருமண ஆசை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தார்" எனக் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

ஹைதரபாத் உப்பரப்பள்ளி நீதிமன்றத்தில் ஜானி ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்படுவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜானி மாஸ்டர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் , பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்முறையை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா, "இதெல்லாம் எனது கணவர் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயல். அருவருக்கத்தகக் குற்றச்சாட்டு. திட்டமிட்ட சதி.பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணிடம் சரியான ஆதாரங்கள் இருக்கின்றனவா?" எனக் கூறியிருந்தார்.


Next Story