அயலான், ஆலம்பனா திரைப்படங்களை வெளியிட தடை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அயலான்'. இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. கிராபிக்ஸ் பணிகள் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், வரும் 2024 பொங்கலை முன்னிட்டு 'அயலான்' படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்தது.
இதே போல், நடிகர் வைபவ், பார்வதி நாயர், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்த 'ஆலம்பனா' திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது. அனால் பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
புதுமுக இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், சுமார் 3 வருட காத்திருப்புக்கு பிறகு ஒருவழியாக டிசம்பர் 15-ந்தேதி(இன்று) திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. அயலான் மற்றும் ஆலம்பனா ஆகிய 2 படங்களையும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களுக்குத் தரவேண்டிய 14.70 கோடி ரூபாய் நிலுவைத் தொகையைத் தரவில்லை என்று கூறி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நிலுவைத் தொகையைக் கொடுக்கும் வரை அயலான், ஆலம்பனா படங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும் டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், டி.ஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.