முதல் காதலை கொண்டாடுங்கள்.. ரீ-ரிலீசாகும் 'அழகி' படம்
இயக்குநர் தங்கர்பச்சானின் ‘அழகி’ திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது.
முதல் காதலின் நினைவுகளைப் பேசும் இத்திரைப்படம், இக்கால தலைமுறையினரை மகிழ்விக்க மீண்டும் ரீ-ரிலீஸாகவுள்ளது என தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் "அழகி". இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், அழகி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டும் இல்லாமல் சிறந்த திரைப் படத்திற்கான பல விருதுகளையும் குவித்தது.
தங்கர்பச்சான் தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தானெழுதிய 'கல்வெட்டு' எனும் சிறுகதையை மையப்படுத்தி, இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார். இளையராஜாவின் இசையும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்தது.
முதல் காதல் என்பது எல்லோருக்கும் ஸ்பெஷலானது. முதல் காதல் சாகும் வரையிலும் மனதோடு ஒட்டியிருக்கும், பள்ளிக்காலத்தின் முதல் காதல், வாழ்வில் எப்போதும் உடன் வரும். அப்படி முதல் காதலியை தனக்கு திருமணம் ஆன பின்னர் ஒருவன் சந்திக்க நேரிட்டால் என்னவாகும் என்பது தான் இப்படத்தின் கதை. எல்லோரின் பள்ளிக்கால நினைவுகளைக் கிளறிவிட்ட இப்படம், அனைவரின் முதல் காதல் நினைவுகளைத் தூண்டிவிட்டது. அப்படியான இந்தப் படம் ரீ-ரிலீஸ் ஆவது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இப்படம் வெளியாகி 22 வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான், தனது சமூக வலைத்தள பக்கத்தில், " பார்த்தவர் மனங்களில் எல்லாம் நீங்காத இடம் பிடித்துக் கொண்ட அழகி திரைப்படம் 22 ஆண்டுகள் கடந்து இப்பொழுது மீண்டும் மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் புதிய தொழில்நுட்பங்களில் புதுப்பொலிவுடன் வெளியாகிறது.
எத்தனைத் தலைமுறைகள் கடந்தாலும் அனைவர் மனதிலும் இடம் பிடித்துக் கொள்ளும் அழகியாக இருந்ததை திரைப்படத்தை மீண்டும் இன்று நான் கண்டபோது உணர்ந்தேன். மனித மனங்களை பண்படுத்தும் காதலின் மெல்லிய உணர்வுகள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் அழகி போன்ற திரைப்படங்கள் இக்கால எதிர்காலத் தலைமுறைகளுக்கு தேவைப்படுவதாக உணர்கிறேன்.எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் முன்னாள் இந்நாள் காதலன், காதலி மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து காணக்கூடிய திரைப்படமாக "அழகி" உள்ளது!
100 திரையரங்கங்களில் 100 நாட்களுக்கு மேல் எவ்வித விளம்பரமும் இன்றி மக்கள் கொண்டாடிய அழகியை இக்கால தலைமுறையும் காண என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன்! " என்று நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார்.