இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அருண் விஜய்யின் 'ரெட்ட தல'


இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அருண் விஜய்யின் ரெட்ட தல
x

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ரெட்ட தல’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்யாசமானதாக இருந்தது. தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாபியா' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன. இவரது நடிப்பில் மிஷன் சாப்டர் 1 எனும் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. பாலாவின் வணங்கான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் 'ரெட்ட தல' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் தடம் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'ரெட்ட தல' திரைப்படத்தினை கிரிஷ் திருக்குமரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கிய கேரக்டரில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். இதனை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம் சி எஸ் இதற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற இருப்பதாக படக்குழுவினர் சில புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


Next Story