மதுவுக்கு எதிரான படம் 'சாலா' - டைரக்டர் எஸ்.டி. மணிபால்
மதுரை நந்தினிதான் 'சாலா' படத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்று டைரக்டர் எஸ்.டி. மணிபால் கூறியுள்ளார்.
சென்னை,
புதுமுகங்கள் நடிக்கும் 'சாலா' படத்தின் டிரெய்லரை அல்லு அர்ஜூன் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். பிரபுசாலமனின் உதவியாளரான எஸ்.டி. மணிபால், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
''தமிழ்நாட்டில் இன்றைக்கு பெரும் பங்கு வகிப்பது மதுதான். 20 வருஷங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெர்டிலிட்டி சென்டர் என்பதே கிடையவே கிடையாது. ஆனால், இன்றைக்கு முக்குக்கு முக்கு அது இருக்கிறது. மதுவினால் ஆண்மைத்தன்மை குறைய ஆரம்பித்ததால்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கு. வன்முறையை உருவாக்குகின்ற இடமாக மதுக்கடைகள் இருக்கிறது." என்கிறார் டைரக்டர் மணிபால்.
"இந்த படத்தின் கதையைக் கிட்டத்தட்ட ஐம்பது கம்பெனிகளுக்காவது சொல்லியிருப்பேன். படத்தின் கதை மதுவுக்கு எதிரான கதை என்பதால் பலரும் தயாரிக்க முன்வரவில்லை. 'விட்னஸ்' படத்தின் தயாரிப்பாளரான டி.ஜி.விஸ்வ பிரசாத் மூலம் கனவு பூர்த்தியானது. கதைப்படி ராயப்புரம்ல உள்ள ஒரு பிரபலமான ஒரு பாரை கைப்பற்ற இரண்டு ரௌடி கும்பல்கள் மோதுகிறார்கள். அந்த பாரை இழுத்து மூட நினைக்கிற ஒரு பெண் இவங்கள சுத்தி நடக்கற சம்பங்களோடு கதை நகரும். இந்தக் கதையை ஹீரோக்கள் நிறைய பேர்கள்கிட்ட சொல்லியிருப்பேன். நடிக்க யாரும் முன்வரவில்லை. அதனால் புதுமுகமா போயிடலாம்னு தீரனைப் பிடித்தோம். அந்த பாரை மூட நினைக்கும் பெண் புனிதாவாக ரேஷ்மா நடிக்கிறாங்க.
மதுக்கடையை மூட நினைக்கிற புனிதா கதாபாத்திரத்திற்கு மதுரை நந்தினிதான் இன்ஸ்பிரேஷன். ஏன்னா மதுக்கடைகளை மூட வேண்டுமென்று பல வருடங்களாகப் பரப்புரை செய்து போராட்டம் நடத்தி வரும் பெண் அவங்கதான். நிஜவாழ்க்கையில் வீரம் நிறைந்த பெண் அவர். படத்தின் க்ளைமாக்ஸும் வித்தியாசமான கிளைமாக்ஸ் ஆக இருக்கும். சென்ஸாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. '' என்று மணிபால் கூறியுள்ளார் .
இந்த படத்தில் ஶ்ரீநாத், அருள்தாஸ், சம்பத்ராம், 'மெட்ராஸ்' வினோத் என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள்.