32 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அமிதாப்பச்சன்?
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை முடித்து விட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் கவரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். கிரிக்கெட் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.
லால்சலாம் படத்தை முடித்து விட்டு சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை எடுத்து பிரபலமான டி.ஜே.ஞானவேல் டைரக்டு செய்யும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இது ரஜினிக்கு 170-வது படம். போலி என்கவுண்ட்டரில் கொல்லப்படும் அப்பாவி ஏழைகளுக்காக போராடும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப்பச்சனையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியும், அமிதாப்பச்சனும் 1991-ல் வெளியான ஹம் என்ற இந்தி படத்தில் சேர்ந்து நடித்து இருந்தனர். சுமார் 32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமிதாப்பச்சனிடம் கதையை சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினியுடன் அமிதாப்பச்சன் நடிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும்.