பணமோசடி வழக்கு: நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி போலீசார் 6 மணி நேரம் விசாரணை


பணமோசடி வழக்கு: நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி போலீசார் 6 மணி நேரம் விசாரணை
x

Image Instagrammed By norafatehi

நோரா பதேஹி டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு முன்பு விசாரணைக்கு இன்று ஆஜரானார்.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். இவர் 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்த போது தொழில் அதிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை நோரா பதேஹிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்கி கொடுத்ததாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்து இருந்தது.

இதையடுத்து நடிகை நோரா பதேஹி, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகை நோரா பதேஹி டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு முன்பு விசாரணைக்கு இன்று ஆஜரானார்.

இன்று ஆஜரான நோராவிடம் வழக்கு தொடர்பான பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்று உள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 2ம் தேதி, நோரா பதேஹியிடம் டெல்லி போலீசார் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து இருந்தனர்.

இதே வழக்கில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று ஆஜரானார். நேற்று அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் நோரா பதேஹிக்கு ஜாக்குலினுடன் நேரடி தொடர்பு இல்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.


Next Story