நடிகர் விஷால்-லைகா நிறுவனம் இடையே நடந்த பரிவர்த்தனை வழக்கு - ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு
நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனம் இடையே நடந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கின் விசாரணையை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
சென்னை,
'விஷால் பிலிம் பேக்டரி' படத்தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்ச ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. இதையடுத்து விஷால் அந்த பணத்தை திருப்பி செலுத்தவில்லை என லைகா நிறுவனம் 2021-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய, ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை ஐகோர்ட்டு நியமித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது ஆடிட்டரின் அறிக்கை குறித்து ஆராய வேண்டியுள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.