ரூ.15 கோடிக்காக நடிகர் சதீஷ் கொலையா...? நண்பரான பண்ணை இல்ல உரிமையாளருக்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு; பரபரப்பு தகவல்


ரூ.15 கோடிக்காக நடிகர் சதீஷ் கொலையா...? நண்பரான பண்ணை இல்ல உரிமையாளருக்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு; பரபரப்பு தகவல்
x

நடிகர் சதீஷ் கவுசிக் தங்கிய பண்ணை இல்ல உரிமையாளருக்கு தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட நிழலுலக தாதாக்களுடன் தொடர்பு என பரபரப்பு தகவல் தெரிவிக்கின்றது.


புதுடெல்லி,


நடிகர், இயக்குனர் என்பது மட்டுமின்றி தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சதீஷ் சந்திர கவுசிக் (வயது 66).

அவர் தனது நண்பரான விகாஸ் மாலு என்பவரின் பண்ணை இல்லத்தில் ஹோலி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடினார். நடனம் ஆடிய களைப்பில் இரவில் தூங்க சென்றவர் பின்னர் சுவாச பாதிப்பு என கூறி நள்ளிரவில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி 9-ந்தேதி அதிகாலையில் உயிரிழந்து விட்டார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. கடந்த 1987-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான மிஸ்டர் இந்தியா மூலம் நடிகராக அறிமுகமானார். இந்நிலையில், அவரது திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட திரை துறையினர், ரசிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இந்த சூழலில், சதீஷ் கவுசிக்கின் மரணத்திற்கு பின்னணியில் உள்ள பல மர்ம விசயங்கள் வெளிவர தொடங்கி உள்ளன. அவரது நண்பரான பண்ணை இல்ல உரிமையாளர், விகாஸ் மாலு என்பவரது பண்ணை இல்லத்தில் வைத்து நடிகர் கவுசிக் உயிரிழந்து உள்ளார்.

அதற்கு முன்பு வரை நண்பர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை இரவில் கொண்டாடி உள்ளார். அதன்பின்னர், தூங்க சென்றார். ஆனால், இரவில் தனது மேலாளரை அழைத்து சுவாச கோளாறு பற்றி கூறியுள்ளார்.

இரவு 12 மணியளவில் மேலாளரை அழைத்து உள்ளார். பின்பு அதிகாலை 1.43 மணியளவில் குருகிராமில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அவரை மேலாளர் சேர்த்து உள்ளார். எனினும், சி.பி.ஆர். சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

அவர் ஹோலி கொண்டாடிய டெல்லி பண்ணை இல்லத்தில் உள்ள சி.சி.டி.வி.யின் 7 மணிநேரம் வீடியோ காட்சிகளை டெல்லி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

எனினும், பண்ணை இல்ல உரிமையாளரின் 2-வது மனைவி அளித்த குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதில், சதீஷ் ஜிக்கும், எனது கணவருக்கும் இடையே வர்த்தக தொடர்புகள் உண்டு. கடந்த ஆண்டு ஆகஸ்டில், சதீஷ் ஜி கொடுத்த ரூ.15 கோடியை திருப்பி தரும்படி துபாயில் வைத்து, எனது கணவரிடம் கேட்டார்.

ஆனால், எனது கணவர் இந்தியாவில் வைத்து தொகையை திருப்பி தருகிறேன் என கூறினார் என்று விகாசின் 2-வது மனைவி போலீசில் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் புகாரில், இதுபற்றி கணவர் விகாசிடம் கேட்டபோது, சதீஷ் ஜியிடம் பணம் வாங்கினேன். ஆனால், கொரோனா காலத்தில் பணம் தொலைந்து விட்டது என கூறினார். பெரிய தொகையை திருப்பி தரும் எண்ணத்தில் விகாஷ் இல்லை.

சதீஷ் கவுசிக்கை எதிர்கொள்ள புளூ பில்ஸ் மற்றும் ரஷிய அழகிகளை பயன்படுத்துவேன் என அவர்என்னிடம் கூறினார். அதனாலேயே, இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தும்படி போலீசாரிடம் தெரிவித்து உள்ளேன் என்று விகாஷின் 2-வது மனைவி கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், விகாஷ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என அவரது 2-வது மனைவி புகார் ஒன்றில் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

அந்த புகாரில், விகாஷின் மகனும் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய தொடங்கினார். இதனை முற்றிலும் தாங்கி கொள்ள முடியாமல் கடந்த அக்டோபரில் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று விகாஷின் 2-வது மனைவி அந்த புகாரில் தெரிவித்து உள்ளார்.

எனினும், விகாஷின் முதல் மனைவியின் மைனர் மகனும் போக்சோ சட்டத்தின் கீழ், விகாஷின் 2-வது மனைவி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.

ஆனால், புகாரை பெற்று கொண்ட போலீசார் அதன்பின்னர் இருவர் மீதும் கைது போனற் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், டெல்லியை சேர்ந்த தொழிலதிபரான விகாஸின் 2-வது மனைவி அளித்த புகாரில், இந்தியாவிலும், துபாயிலும் எங்களை கவுசிக் அடிக்கடி சந்திப்பது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு முன் முதலீட்டு நோக்கத்திற்காக கொடுத்த தொகையை திருப்பி தரும்படி துபாயில் வைத்து, கவுசிக் கேட்டார். முதலீட்டிலும் ஈடுபடாமல், தொகையையும் திருப்பி தராமல் மோசடி செய்தது பற்றி உணர்ந்து உள்ளார். அதனை விகாசிடமும் கூறியுள்ளார் என புகாரில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் எனது கணவரின் பண்ணை இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில நடிகர் சதீஷ் கவுசிக் கலந்து கொண்டார். வந்த இடத்தில் அவரது உடல்நலம் பாதிப்படைந்தது. கவுசிக்கிற்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

அதற்கு தனது கணவரே ஏற்பாடு செய்திருந்தார். அந்த பண்ணை இல்லத்தில் சில சர்ச்சைக்குரிய மருந்து பொருட்களும் இருந்தன என கூறினார். இதேபோன்று, போலீசார் சர்ச்சைக்குரிய சில மருந்துகளை கைப்பற்றி உள்ளனர். இதனால், நடிகர் கவுசிக்கின் மரணத்தில் பல சந்தேகங்கள் கிளம்பி உள்ளன. இது திட்டமிட்ட படுகொலை என விகாஸின் 2-வது மனைவி கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறும்போது, விகாஸ் மாலுவுக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் உள்பட பலருடன் தொடர்பு உள்ளது. எங்களது வீட்டுக்கு அடிக்கடி வரும் பல்வேறு நபர்களின் புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. எங்கள் வீட்டிற்கு வந்த அனாஸ் என்பவர் தாவூத் இப்ராகிமின் மகன் என விகாஸ் என்னிடம் கூறினார். எங்கள் வீட்டுக்கு வந்த முஸ்தபா என்பவர் தாவூத் இப்ராகிமின் வலதுகரம் போல் செயல்படுபவர் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story