நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது
நடிகர் மாரிமுத்துவின் உடல் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை,
நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. டப்பிங் முடித்து வீட்டிற்கு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. அவரது திடீர் மரணம் திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல சின்னத்திரை தொடரான 'எதிர்நீச்சல்' தொடரில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மாரிமுத்து பிரபலமானார். அதுமட்டுமின்றி தமிழில் பரியேறும் பெருமாள், கார்பன், எமன், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமின்றி கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார்.
நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் மாரிமுத்துவின் உடல் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று அவரது மகன் அகிலன் தெரிவித்து உள்ளார்.