வருகிற 28-ந் தேதி நடிகர் கவுதம் கார்த்திக்-நடிகை மஞ்சிமா திருமணம்
கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் வருகிற 28-ந் தேதி நடக்க உள்ளது.
நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாக தகவல் வெளியானது. பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்திக் கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இவன் தந்திரன், ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் "தேவராட்டம்" படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்தது. காதலை சமூக வலைத்தளத்தில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது திருமண தேதி முடிவாகி உள்ளது.
கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் வருகிற 28-ந் தேதி நடக்க உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். அதன்பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திரை பிரபலங்களை அழைத்து நடத்த உள்ளனர்.