'மதுரையில் விஜயகாந்துக்கு சிலை வைக்க வேண்டும்' - திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை


மதுரையில் விஜயகாந்துக்கு சிலை வைக்க வேண்டும் -  திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை
x

தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பிற்பகல் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் விஜயகாந்துக்கு முழு உருவ சிலை நிறுவ தமிழக அரசுக்கு திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைக்கும் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைக்கும் கோரிக்கை...

1. மறைந்த திரு.'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் சாலை என பெயரிட வேண்டும்.

2. தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி 'கேப்டன்' விஜயகாந்த் விருது அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் பெயரில் சிறப்பான விருது வழங்க ஆவண செய்ய வேண்டும் .

3. மறைந்த திரு.'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் பிறந்த மதுரையில் 'கேப்டன்' விஜய்காந்த் அவர்களின் முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும்.

திரைத்துறையிலும் அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் செய்த காலத்தால் அழியாத சாதனைகளை பறை சாற்றும் விதமாக, இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர். திரு ஸ்டாலின் அவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி அவர்கள், மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. வெள்ளக்கோயில் சாமிநாதன் அவர்கள், சென்னை மேயர் திருமதி ப்ரியா ஆகியோருக்கு வேண்டுகோளாக முன் வைக்கிறோம் நன்றி' என்று தெரிவித்துள்ளனர்.


Next Story