மோகன்லால் மகனும்.. பிரியதர்ஷன் மகளும்..
மலையாள திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோேலாச்சி வரும் பிரபலங்களில் நடிகர் மோகன் லாலும், இயக்குனர் பிரியதர்ஷனும் முக்கியமானவர்கள்.
சினிமாத் துறைக்குள் நுழைந்த காலம் தொட்டே இருவரும் நண்பர்கள். மோகன்லால், பிரியதர்ஷன் மற்றும் சில நண்பர்கள் இணைந்து தான் ‘திறனோட்டம்’ என்ற படத்தை 1978-ம் ஆண்டில் எடுத்தனர்.
மோகன்லால் நடிப்பில் முதன் முதலாக வெளியாகி இருக்க வேண்டிய அந்தத் திரைப்படம் சென்சார் போர்டு பிரச்சினை காரணமாக தள்ளிப் போனது. அதுவும் ஓராண்டு, இரண்டாண்டு அல்ல.. கால் நூற்றாண்டு காலம். ஆம்.. 1978-ல் உருவான அந்தத் திரைப் படம் 2005-ம் ஆண்டில் தான் வெளியானது.
அந்த நேரத்தில் நடிப்புத் துறையில் மோகன்லாலும், இயக்குனர் துறையில் பிரியதர்ஷனும் தனக்கான இடத்தைப் பிடித்து கொடிகட்டி பறந்து கொண்டிருந்தனர். 40 ஆண்டுக்கும் மேலான நட்பில், மோகன்லாலை வைத்து இதுவரை 40-க்கும் அதிகமான படங்களை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். இந்த இரண்டு திரையுலக ஜாம்பவான்களின் நட்பும் இன்றும் அப்படியே தொடர்கிறது. அதுவும் திரைத்துறையில் நுழையும் போது இருந்த அதே ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் இருக்கிறார்கள். அதனால் தான் இப்போதும், அவர்கள் இருவரும் இணைந்து படங்களில் பணியாற்ற முடிகிறது.
இறுதியாக 2016-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ‘ஒப்பம்’ திரைப் படத்தில் பார்வையற்றவராக நடித்திருந்தார் மோகன்லால். இந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த அந்தக் கதாபாத்திரம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததுடன், படமும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரலாற்று படம் ஒன்றை இயக்கப் போவதாக பிரியதர்ஷன் அறிவித்திருந்தார். இந்தியாவுக்குள் நுழைந்த வாஸ்கோட காமா முதன் முதலாக கால் வைத்த பகுதி கேரளம். அங்கு அவர் நடத்திய அராஜகங்களை தட்டிக்கேட்டதோடு, அவரை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தவர்கள், குஞ்சாலி மரக்காயர்கள். மொத்தம் 4 குஞ்சாலி மரக்காயர்கள் இருப்பதாக வரலாறு பதிவு செய்திருக்கிறது. இதில் 4-வது குஞ்சாலி மரக்காயரின் வரலாற்றைத்தான் பிரியதர்ஷன் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘மரக்கார்; அரபிக்கடலின்ட சிம்ஹம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
குஞ்சாலி மரக்காயர் கதாபாத்திரத்திற்கு தனது நீண்ட நாள் நண்பரான மோகன்லாலை ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்ட பிரியதர்ஷன், மற்ற நடிகர்- நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
‘மரக்கார்’ படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிறமொழியில் பிரபல நடிகர்களையும் நடிக்க வைக்க பிரியதர்ஷன் முயற்சித்து வருகிறார். அந்த வரிசையில் தமிழில் நடிகர் பிரபு, அர்ஜூன், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி சமீபத்தில் இந்தப் படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷூம் இணைந்திருக்கிறார்.
மலையாளத்தில் 2013-ம் ஆண்டு வெளியான ‘கீதாஞ்சலி’ படத்தின் வாயிலாக கீர்த்திசுரேஷை அறிமுகம் செய்தது பிரியதர்ஷன் தான். அதன்பிறகு மலையாளத்தில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாகிவிட்டார். தற்போது ‘மரக்கார்’ படத்தில் நடிப்பதற்காக தன் குருநாதர் அழைத்ததன் பேரில் மீண்டும் மலையாள சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார்.
இந்தப் படத்தில் இன்னும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், மோகன்லால் நடிக்கும் குஞ்சாலி மரக்காயர் கதாபாத்திரத்தின் இளம் வயது தோற்றத்தில் மோகன்லால் மகன் பிரணவ்வும், அவரது காதலியாக பிரியதர்ஷனின் மகள் கல்யாணியும் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மலையாள சினிமாவில் ‘ஆதி’ படத்தின் மூலமாக அறிமுகமாகி பெரிய வெற்றியைக் கொடுத்தவர் பிரணவ். அதேபோல் தெலுங்கில் ‘ஹலோ’ படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே அறிமுக நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது பெற்றவர் கல்யாணி. இவர்கள் இரு வரும் காதல் வலையில் விழுந்து விட்டதாகக் கூட தகவல்கள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்த நேரத்தில் இருவரும் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை அதிகரித் திருக்கிறது.
Related Tags :
Next Story