இந்தியன்–2 படத்தில் கமல்ஹாசன் வேடங்களில் மாற்றம்?
இந்தியன்–2 படத்தில் கமல்ஹாசன் வேடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடித்து 1996–ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன. படத்தை இயக்கும் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தில் முடிகிறது. எனவே இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த வாரம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. அரசியல் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு முழுமையாக படப்பிடிப்பில் கமல்ஹாசன் ஈடுபடுகிறார். இந்தியன்–2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று ஏற்கனவே அவர் கூறியுள்ளார்.
முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல். இந்தியன் படத்தில் தாத்தா கதாபாத்திரம்தான் படத்தை தூக்கி நிறுத்தி இருந்தது. இரண்டாம் பாகத்திலும் தாத்தா கதாபாத்திரம் உள்ளது என்கின்றனர்.
இந்தியன் தாத்தா தீவிபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கருதுவது போன்றும் அவரோ வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போன் செய்வது போன்றும் முதல் பாகத்தை முடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்தில் அவர் இந்தியா திரும்பி வந்து ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் வீழ்த்துவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர்.
முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதானவர்போல் மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து கமல்ஹாசனின் வயதான தோற்றத்துக்கு விசேஷ மேக்கப் போடுகின்றனர். இளம் கமல்ஹாசன் வேடம் முதல் பாகம்போல் வில்லத்தனமாக இருக்காது என்றும், அவரும் ஊழலுக்கு எதிராக போராடுபவர் போலவே வருவார் என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story