என்னை விலைமாது என்று கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடிகை ஸ்ரீரெட்டி புகார்


என்னை விலைமாது என்று கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடிகை ஸ்ரீரெட்டி புகார்
x
தினத்தந்தி 28 July 2018 3:27 AM IST (Updated: 28 July 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

தன்னை விலைமாது என்று கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்தார்.

சென்னை,

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார்.

ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது செக்ஸ் புகார் கூறி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இயக்குனரும், நடிகருமான வாராகி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஸ்ரீரெட்டியே தான் விரும்பி சிலருடன் பாலியலில் ஈடுபட்டதாக கூறியிருப்பதால் அவர் மீது விபசார பிரிவிலும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவிலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாராகி தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.

இது ஸ்ரீரெட்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் பாலியல் தொழிலாளி இல்லை. பாலியல் தொழிலாளி என்று அவதூறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி நேற்று பகல் 1.30 மணிக்கு திடீரென்று சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர், தன்னை விலைமாது என்று கூறிய இயக்குனர் வாராகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனு அளித்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட அனைத்து மொழி பட உலகிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. பட வாய்ப்பு கேட்பவர்களை படுக்கையில் பயன்படுத்துகிறார்கள். நான் பாதிக்கப்பட்ட பெண்.

இந்த பிரச்சினையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே போராடுகிறேன். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து இருக்கிறேன். எங்குமே எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.

நீதிக்காக போராடுகிறேன். இந்த பிரச்சினையை நடிகர் சங்கத்துக்கு கொண்டு சென்றும் பயன் இல்லை. நான் விலைமாது என்றும் என்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாராகி என்பவர் புகார் கூறி இருக்கிறார். அவரை யார் என்றே தெரியாது. என்னை விலைமாது என்கிறாரே? அவர் என்னிடம் வந்தாரா? எனக்கு பணம் கொடுத்தாரா?

பெண்களுக்கு மரியாதை கொடுக்க அவருக்கு தெரியவில்லை. என்னை விலைமாது என்று கூறிய வாராகி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருக்கிறேன். இந்த புகார் மீது உளவு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார்.

Next Story