டி.ஐ.ஜி ரூபா வாழ்க்கை சினிமா படமாகிறது நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை

கர்நாடக பெண் போலீஸ் டி.ஐ.ஜி ரூபாவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் ரூபா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கர்நாடக சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி ரூபா சோதனை நடத்தி சசிகலாவுக்கு விதியை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாக அம்பலப்படுத்தினார்.
சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயணா இந்த விதிமீறலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் இதற்காக ரூ.2 கோடிவரை கைமாறி இருக்கிறது என்றும் புகார் கூறப்பட்டது.
பரபரப்பு
இந்த குற்றச்சாட்டு தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷனை கர்நாடக அரசு நியமித்தது. அரசு ரகசியங்களை வெளியிட்டதாக டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டார்.
இந்த சம்பவங்களை மையமாக வைத்து டி.ஐ.ஜி ரூபாவின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ஒற்றைக்கண் சிவராசன் மற்றும் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை சினிமா படமாக எடுத்து வெளியிட்டவர்.
நயன்தாரா
டி.ஐ.ஜி ரூபா வாழ்க்கையை படமாக்குவது குறித்து அவரிடம் ஒப்புதல் பெற்று விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறினார். இதற்கான திரைக்கதை தயாராகி வருகிறது. ரூபாவும் சமூக வலைத்தளத்தில் தனது வாழ்க்கை சினிமா படமாக தயாராவதற்கு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
இந்த படத்தில் டி.ஐ.ஜி ரூபா வேடத்தில் நடிக்க நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது. நயன்தாரா நடிப்பதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story