தமிழகத்தில் மட்டும் ரூ.15 லட்சம் வசூல்... ரீ-ரிலீஸில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய கமல்..!
முத்து மற்றும் ஆளவந்தான் திரைப்படங்கள் கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.
சென்னை,
கடந்த 2001-ம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதேபோல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'முத்து'. இந்த படத்தில் மீனா, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். 'தென்மாவின் கொம்பத்' என்னும் மலையாள படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தற்போதுவரை இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது.
இந்த இரண்டு திரைப்படங்களும் கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. இரண்டு திரைப்படங்களும் வெளியான நாள் முதலே ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் முத்து படத்தை விட ஆளவந்தான் திரைப்படம் அதிகம் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி முதல் 3 நாட்கள் முடிவில் ஆளவந்தான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.15 லட்சம் வசூலித்து உள்ளதாகவும் முத்து திரைப்படம் ரூ.7 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இனி வரும் நாட்களில் இந்த இரண்டு படங்களின் வசூலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.