நம்பமுடியாத சாதனை படைத்த 77 வயது முதியவரின் இதயம்


நம்பமுடியாத சாதனை படைத்த 77 வயது முதியவரின் இதயம்
x

உலகமெங்கும் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தமனி வழியாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது இதய நோய் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. தமனி குழாய்களில் கொழுப்புகள் படிவதால் ஏற்படும் அடைப்புகளை நீக்கி ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துவதற்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

அப்படி இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் நீண்ட காலம் வாழ்வது மருத்துவ உலகில் சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த பிறகு அதிக காலம் உயிர் வாழ்ந்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு ஒரே ஆண்டுக்குள் மூன்று முறை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தற்போது 77 வயதாகும் அவரது பெயர் கொலின் ஹான்காக். 30 வயதில் இவருக்கு இதய நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோதுதான் இதயம் பலவீனமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே ஆண்டுக்குள் மூன்று பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மூன்று அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக அமைந்தாலும் வாழ்நாள் முழுவதும் இதய பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். அவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்று உறுதியாக கூறவும் முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள்.

ஆனால் மருத்துவ உலகின் கணிப்பை தகர்த்தெறிந்துவிட்டு இதய நோய் பிரச்சினைகள் எதுவுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். ஆகஸ்டு 4 தேதிப்படி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 45 ஆண்டுகள் மற்றும் 361 நாட்கள் முடிவடைந்திருக்கின்றன. இந்த கணக்கின்படி இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த பிறகு நீண்ட காலம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்ற சாதனைக்கு கொலின் ஹான்காக் சொந்தக்காரராகி இருக்கிறார். கின்னஸ் உலக சாதனை அமைப்பும் இதனை உறுதி செய்து சாதனை சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

30 வயது வரை ஹான்காக் ஆரோக்கியமான உடல் தகுதியுடன் தான் இருந்திருக்கிறார். உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டு வந்திருக்கிறார். கூடைப்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்திருக்கிறார். ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கமும், பரம்பரை ரீதியான மரபணு பிரச்சினையும் இதய நோய் ஏற்படுவதற்கு காரணமாகிவிட்டது.

இவரது குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு ஹைபர்கொலஸ்டிரோலீமியா என்ற மரபணு நோய் இருக்கிறது. உடலில் அதிக கொழுப்பு படிந்து இதய நோயை ஏற்படுத்தக்கூடியது. அத்துடன் ஹான்காக் அதிக கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை விரும்பி சாப்பிட்டு வந்திருக்கிறார். முட்டையும், கொழுப்பு நிறைந்த சிப்ஸ்சும்தான் அவருடைய பிரதான உணவாக இருந்திருக்கிறது.

அவை இதய நோய்க்கு வழிவகுத்துவிட்டன. தற்போது ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றி வருகிறார். இதற்கு முன்பு டெல்பெர்ட் டாலே மேக்பீ என்பவர்தான் இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்பு அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தவராக விளங்கினார்.

அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு 41 ஆண்டுகள் மற்றும் 63 நாட்கள் உயிர் வாழ்ந்தார். 2015-ம் ஆண்டு தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார்.


Next Story