துலீப் கோப்பை தொடரில் விராட் மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன்..? ஜெய்ஷா விளக்கம்


துலீப் கோப்பை தொடரில் விராட் மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன்..? ஜெய்ஷா விளக்கம்
x
தினத்தந்தி 15 Aug 2024 9:04 AM GMT (Updated: 15 Aug 2024 4:23 PM GMT)

துலீப் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை தொடர் செப்டம்பர் 5-ம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஏனெனில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கவுதம் கம்பீர் பிட்டாக இருக்கும் அனைவரும் கட்டாயம் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டு வந்துள்ளார்.

குறிப்பாக பும்ராவை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் விளையாட வேண்டும் என்று கம்பீர் கண்டிப்புடன் தெரிவித்தார். அதனாலேயே சமீபத்திய இலங்கை ஒருநாள் தொடரில் ஆரம்பத்தில் ஓய்வெடுக்க முடிவு எடுத்திருந்த அவர்களை கம்பீர் வலுக்கட்டாயமாக விளையாட வைத்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுத்தது. அதே சமயம் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, சிராஜ் உள்ளிட்ட மற்ற அனைத்து சீனியர் வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாட உள்ளனர். மேலும் இளம் வீரர்களும் விளையாட உள்ளனர்.

இந்நிலையில் அடுத்ததாக வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா முக்கியமான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. எனவே அதற்கு முன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் காயத்தை சந்தித்து விடக்கூடாது என்ற எண்ணத்துடன் துலீப் கோப்பையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். மேலும் அனுபவம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு.:-"அவர்களைத் தவிர்த்து அனைவரும் விளையாடுகின்றனர். அதை நீங்கள் பாராட்ட வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் புஜ்ஜி பாபு தொடரில் விளையாடுகின்றனர். நாம் விராட் மற்றும் ரோகித் ஆகியோரை துலீப் கோப்பையில் விளையாடுமாறு சொல்ல முடியாது. அதனால் அவர்கள் காயமடையும் ரிஸ்கை சந்திக்கலாம். ஆஸ்திரேலியா இங்கிலாந்து, போன்ற வெளிநாடுகளில் அனைத்து சர்வதேச வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. எனவே நாங்களும் வீரர்களை மரியாதையுடன் நடத்த விரும்புகிறோம்" என்று கூறினார்.


Next Story