எங்களை தேவையின்றி சீண்டினால் சும்மா விட மாட்டோம் - ரோகித் சர்மா எச்சரிக்கை
இந்திய அணியினர் பொறுமையாக இருக்கக்கூடியவர்கள் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
சிட்னி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை இந்திய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்கு சில அடி ஓடி வந்தபோது, பேட்ஸ்மேன் கவாஜா இன்னும் தயாராகவில்லை என நடுவர் சிக்னல் காட்டினார். இதனால் அதிருப்தியடைந்த பும்ரா என்னப்பா இது.... என்பது போல் இரு கைகளையும் விரித்தபடி கேட்க, எதிர்முனையில் நின்ற இளம் பேட்ஸ்மேன் கான்ஸ்டாஸ் அவரை ஏதோ சொல்லி சீண்டினார்.
இதனால் கோபமடைந்த பும்ரா பதிலுக்கு வார்த்தைகளை உதிர்த்தார். பிறகு நடுவர் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடைசி பந்தில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் பும்ரா நேராக கான்ஸ்டாஸ் அருகே ஓடி வந்து ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் ஒட்டுமொத்த இந்திய அணியும் வெறித்தனமாக கொண்டாடினர்.
இந்நிலையில் இந்திய அணியினர் அமைதியாக இருக்கக்கூடியவர்கள் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் தேவையின்றி சீண்டினால் ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து மொத்தமாக வந்து பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எங்கள் வீரர்கள் எதிரணி அமைதியாக இருக்கும் வரை அவர்களும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் ஒருவேளை நீங்கள் வம்பிழுத்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். களத்தில் கிரிக்கெட்டை மட்டும் விளையாடுங்கள். இது போன்ற தேவையற்ற பேச்சுகள் நன்றாக இருக்காது. எங்களுடைய வீரர்கள் கிளாஸ் நிறைந்தவர்கள். அவர்கள் எப்போதும் தங்களுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்" என்று கூறினார்.