என்னுடைய அடுத்த லட்சியம் அதுதான் - சென்னை, மும்பை அணிகளை எச்சரித்த கம்பீர்


என்னுடைய அடுத்த லட்சியம் அதுதான் -  சென்னை, மும்பை அணிகளை எச்சரித்த கம்பீர்
x

image courtesy: AFP 

தினத்தந்தி 30 May 2024 4:01 AM GMT (Updated: 30 May 2024 4:13 AM GMT)

3-வது ஐ.பி.எல். கோப்பை தற்காலிகமாக மட்டுமே மகிழ்ச்சியை கொடுப்பதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17-வது ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கொல்கத்தாவின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் 2012, 2014-ல் கேப்டனாக கோப்பையை வென்றுக் கொடுத்த அவர் இந்த வருடம் கொல்கத்தாவின் ஆலோசகராக பொறுப்பேற்றார். அந்தப் பதவிக்கு வந்ததும் சுனில் நரைனை தொடக்க வீரராக கம்பீர் களமிறக்கினார். அதை பயன்படுத்திய சுனில் நரைன் ஆல் ரவுண்டராக செயல்பட்டு தொடர் நாயகன் விருது வென்று கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார்.

அந்த வகையில் கவுதம் கம்பீர் நிகழ்த்திய சில அதிரடியான மாற்றங்கள் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவியது. மேலும் தற்போது 3-வது கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா அணி, சென்னை, மும்பையை தொடர்ந்து 2-வது வெற்றிகரமான ஐ.பி.எல். அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் 3-வது கோப்பை தற்காலிகமாக மட்டுமே மகிழ்ச்சியை கொடுப்பதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்னும் 3 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐ.பி.எல். அணியாக கொல்கத்தா முன்னேறினால் மட்டுமே தமக்கு முழுமையான மகிழ்ச்சி என்று கம்பீர் கூறியுள்ளார். எனவே மும்பை மற்றும் சென்னை அணிகளை முந்தி கொல்கத்தாவை வெற்றிகரமான அணியாக முன்னேற்றும் பயணத்தை துவங்கியுள்ளதாக எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"என்னைக் கேட்டால் இப்போதும் நாங்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை விட 2 கோப்பைகள் பின்தங்கியுள்ளோம். ஆம் நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இன்னும் அங்கே குறை இருக்கிறது. ஏனெனில் நாங்கள் இன்னும் ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணியாக வரவில்லை. அந்த இடத்திற்கு வருவதற்கு நாங்கள் இன்னும் 3 கோப்பைகளை வெல்ல வேண்டும். இன்னும் 3 கோப்பைகளை வெல்வதற்கு நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். எனவே அடுத்த லட்சியம் கொல்கத்தாவை சிறந்த அணியாக மாற்றுவதுதான். அது நடந்தால் அதை விட சிறந்த உணர்வு எதுவுமில்லை" என்று கூறினார்.


Next Story