ஜடேஜாவுக்கு நன்றி - ஆட்ட நாயகன் அஸ்வின் பேட்டி


ஜடேஜாவுக்கு நன்றி - ஆட்ட நாயகன் அஸ்வின் பேட்டி
x

image courtesy: twitter/@BCCI

தினத்தந்தி 22 Sep 2024 9:29 AM GMT (Updated: 22 Sep 2024 10:27 AM GMT)

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார். குறிப்பாக முதல் இன்னிங்சில் 144 - 6 என இந்தியா தடுமாறியபோது சதமடித்து 113 ரன்கள் குவித்த அவர், 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் சென்னையில் சிறுவயதில் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகனாக அமர்ந்து இந்திய அணியை பார்த்ததாக அஸ்வின் கூறியுள்ளார். அப்படிப்பட்ட இந்திய அணிக்காக தற்போது சொந்த ஊரில் விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றது சிறப்பானது என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"ஒவ்வொரு முறையும் சென்னையில் நான் விளையாடும்போது அது எனக்கு அற்புதமான உணர்வை கொடுக்கும். இங்கு ரசிகர்கள் அமரும் பகுதியிலிருந்து நான் நிறைய டெஸ்ட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டை பார்த்துள்ளேன். தற்போது நான் செய்வதை மிகவும் என்ஜாய் செய்கிறேன். நான் என்னுடைய ஆட்டத்தை எளிமையாக வைத்திருக்கிறேன். சதமடிக்க எனக்கு உதவிய ஜடேஜாவுக்கு நன்றி. என்னுடைய பவுலிங் வாயிலாக வாழ்க்கையை நடத்துகிறேன். எனக்கு முதலில் பவுலிங்தான் வரும். பேட்டிங்கும் இயற்கையாக வரும். கடந்த சில வருடங்களாக அதை பிரித்து எடுத்து முன்னேற்ற முயற்சிக்கிறேன்" என்று கூறினார்.


Next Story