டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?


டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?
x
தினத்தந்தி 25 Jun 2024 4:10 AM GMT (Updated: 25 Jun 2024 5:38 AM GMT)

இந்திய அணி தனது சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

செயின்ட் லூசியா,

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்தார்.

பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்குள் முன்னேறி அசத்தியுள்ளது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், "மனம் திருப்தியாக உள்ளது. ஆஸ்திரேலியா அணி என்ன மாதிரியான அச்சுறுத்தலை கொடுக்கும் என்று நன்றாக அறிவோம். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எங்களுக்கு என்ன தேவையோ, அதனை சரியாக செய்தோம். 200 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் நல்ல இலக்கு. பிட்ச் மற்றும் சூழலை சரியாக பயன்படுத்தினோம் என்று நினைக்கிறேன்.

அதேபோல் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்பட வேண்டிய தருணமாகவும் அமைந்தது. சரியான நேரத்தில் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டிய தேவை இருந்தது. குல்தீப் யாதவின் பலம் என்ன என்பது தெரியும். அதனால் அவரை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். நியூயார்க் பிட்ச்கள் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் அப்படியல்ல.

அரையிறுதி சுற்றை பொறுத்தவரை நாங்கள் பெரிதாக வித்தியாசமாக எதையும் செய்யப் போவதில்லை. இதுவரை எப்படி விளையாடி வருகிறோமோ, அப்படிதான் விளையாடுவோம். ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூடுதலாக புரிந்து கொள்வோம். எதிர்காலத்தை நினைத்து கூடுதல் அழுத்தத்துடன் விளையாட தேவையில்லை என்று கருதுகிறேன். இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடப் போவது நன்றாக இருக்கும்" என்று கூறினார்.


Next Story