டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்


தினத்தந்தி 25 Jun 2024 5:10 AM GMT (Updated: 25 Jun 2024 11:58 AM GMT)

சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதின.

கிங்ஸ்டவுன்,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் 1 பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான தன்சித் ஹசன் மற்றும் ஷகிப் டக் அவுட்டிலும், கேப்டன் ஷண்டோ 5 ரன்களிலும், சவுமியா சர்கார் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றம் அளித்தனர்.

இதனிடையே 2 முறை மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் வங்காளதேசம் 19 ஓவர்களில் 114 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் ஆன லிட்டன் தாஸ் நிலைத்து விளையாடி அணியை இலக்கை நோக்கி நெருங்க வைத்தார். அரை சதம் அடித்து அசத்திய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து போராடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

முடிவில் 17.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

சிறப்பாக பந்து வீசி அசத்திய ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஷீத் கான் மற்றும் நவீன் உல் ஹக் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.


Next Story