சிட்னி டெஸ்ட்; நாளைய ஆட்டத்தில் பும்ரா விளையாடுவாரா..? - பிரசித் கிருஷ்ணா தகவல்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
சிட்னி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 181 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களுடன் தடுமாறி வருகிறது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்திய அணி இதுவரை 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இன்றைய ஆட்டத்தின் பாதியில் கேப்டன் பும்ரா காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றார். அதன் காரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி அணியை வழிநடத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து பும்ரா மைதானத்திற்கு வந்தார். இந்நிலையில், நாளைய 3ம் நாள் ஆட்டத்தில் பும்ரா விளையாடுவாரா? என கேள்வி எழும்பி உள்ளது.
இந்நிலையில், இன்றைய 2ம் நாள் ஆட்டத்திற்கு பின் இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பும்ரா குறித்து சில தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது, பும்ராவுக்கு முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றார். மருத்துவக்குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர்கள் அனுமதி கொடுத்தால் பும்ரா நாளைய ஆட்டத்தில் விளையாடுவார். இவ்வாறு அவர் கூறினார்.