அங்கே தவற விட்டதை இந்தியாவை வீழ்த்தி இங்கே பெறுவோம் - அயர்லாந்து பயிற்சியாளர்


அங்கே தவற விட்டதை இந்தியாவை வீழ்த்தி இங்கே பெறுவோம் - அயர்லாந்து பயிற்சியாளர்
x
தினத்தந்தி 5 Jun 2024 11:29 AM GMT (Updated: 5 Jun 2024 1:25 PM GMT)

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

நியூயார்க்,

கடந்த 1-ம் தேதி தொடங்கிய 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்தை இன்று சந்திக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஐசிசி தர வரிசையில் நம்பர் 1 அணியாக திகழ்கிறது.

மேலும் விராட் கோலி, பும்ரா போன்ற தரமான மேட்ச் வின்னர்கள் இந்திய அணியில் நிறைந்திருக்கிறார்கள். எனவே இந்த போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று நம்பப்படுகிறது. முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வீரர்களின் பலம் பலவீனங்கள் பற்றிய டேட்டா தங்கள் கையில் இருப்பதாக அயர்லாந்து அணியின் பயிற்சியாளர் கேரி வில்சன் தெரிவித்துள்ளார். மேலும் 2022-ல் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 2 போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றியை நழுவ விட்டதாக அவர் கூறியுள்ளார். எனவே அங்கே தவற விட்ட வெற்றியை இந்தியாவை தோற்கடித்து இங்கே பெறுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;-

"இந்திய அணியை பற்றி எங்களுக்கு நிறைய தெரியும். அவர்கள் பற்றிய நிறைய தகவலும் இருக்கிறது. அவர்கள் உலகம் முழுவதிலும் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளனர். அடிப்படையில் அவர்களிடம் அனைவரும் நல்ல வீரர்களாக இருக்கின்றனர். ஆனால் எங்களிடமும் நல்ல வீரர்கள் இருக்கின்றனர். எனவே போட்டி நாளில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும்போது அனைத்தும் திரும்பும் என்று நினைக்கிறேன். இந்தியாவின் அனைத்து வீரர்களுக்கும் எங்களிடம் திட்டம் இருக்கிறது. எங்களுடைய அனலிஸ்ட் விடாமுயற்சி செய்கிறார்.

அதனால் இந்தியர்கள் விளையாடிய கிரிக்கெட்டை பற்றிய நிறைய டேட்டா எங்களிடம் உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக நாங்கள் நெருக்கமான போட்டிகளைக் கொண்டிருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அந்த போட்டிகளில் எங்களால் வெற்றியின் கோட்டை தாண்ட முடியவில்லை. அது எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கிறது. எனவே எங்களால் இங்கே அவர்களை வீழ்த்த முடியும். எந்த அணிக்கு எதிராகவும் நாங்கள் அசத்த முடியும் என்பது எங்களுக்கு தெரியும். இந்தத் தொடருக்கு நாங்களும் நல்ல பார்மில் வந்துள்ளோம்" என்று கூறினார்.


Next Story