இந்தியா அபார பந்துவீச்சு... ஜிம்பாப்வே அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்


இந்தியா அபார பந்துவீச்சு... ஜிம்பாப்வே அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்
x
தினத்தந்தி 14 July 2024 2:26 PM GMT (Updated: 14 July 2024 2:51 PM GMT)

இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 5-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றிவிட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் அடிக்க ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன மதவேர டக் அவுட்டிலும், அவரை தொடர்ந்து பிரையன் பென்னட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மருமணியுடன் டியான் மியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அணியை சரிவிலிருந்து காப்பாற்ற போராடியது. இருப்பினும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மருமணி 27 ரன்களிலும், டியான் மியர்ஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதோடு ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது.

பிறகு களமிறங்கிய வீரர்களில் பராஸ் அக்ரம் அதிரடியாக விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். அவர் 13 பந்துகளில் 27 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

18.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 34 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளும் , துபே 2 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.


Next Story