விழுந்த கலங்கரை விளக்கம் பாறையை விட ஆபத்தானது - ரோகித் சர்மா குறித்து இந்திய முன்னாள் வீரர்


விழுந்த கலங்கரை விளக்கம் பாறையை விட ஆபத்தானது - ரோகித் சர்மா குறித்து இந்திய முன்னாள் வீரர்
x

image courtesy: AFP

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டிலிருந்து ரோகித் சர்மா விலகினார்.

மும்பை,

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில், பும்ரா கேப்டனாக செயல்படுகிறார். மேலும் டாசின்போது, ரோகித் தாமாக முன்வந்து இந்த போட்டியிலிருந்து ஓய்வு எடுப்பதாக தங்களிடம் கூறினார் என்று பொறுப்பு கேப்டன் பும்ரா தெரிவித்தார்.

முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வெற்றி பெற்ற இந்திய அணி, அதற்கடுத்த 3 போட்டிகளில் 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டது. அதற்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அதன் காரணமாக ஓய்வு பெறுமாறு இந்திய ரசிகர்களே அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். அந்த நிலையில் அணியின் நலனுக்காக 5-வது போட்டியில் ரோகித் சர்மா தாமாகவே விலகிக் கொண்டார்.

இந்நிலையில் ரோகித் சர்மா இன்னும் அதிகமான மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு தகுதியானவர் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 தொடர்களில் சுமாராக விளையாடியதற்காக அவரை நீக்கியது சரியல்ல என்று சித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு:- "ஒரு கேப்டன் தொடரின் பாதியிலேயே நீக்கப்படக் கூடாது. பாதியிலேயே வெளியேறும் வாய்ப்பையும் கொடுக்கக் கூடாது. இது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும். இதற்கு முன் மார்க் டைலர், முகமது அசாருதீன் போன்ற கேப்டன்கள் ஒரு வருடத்திற்கு மேல் மோசமான பார்மில் இருந்ததை நான் பார்த்துள்ளேன்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோகித் சர்மா அணி நிர்வாகத்திடம் இருந்து இன்னும் அதிகமான மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு தகுதியானவர். இது போன்ற வேடிக்கையான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது. இது அணி நிர்வாகத்திடம் மிகவும் மோசமான முடிவு. விழுந்த கலங்கரை விளக்கம் பாறையை விட ஆபத்தானது" என்று கூறினார்.


Next Story