ஓமனா ஒரு கேள்விக்குறி ?


ஓமனா ஒரு கேள்விக்குறி ?
x

ஓமனாவின் கதையைத் திரைப்படமாக்கும் முயற்சி மலையாள சினிமா உலகில் நடந்து வருகிறது. திரில்லிங்கான இந்த பயங்கர கொலையை செய்துவிட்டு மாயமான ஓமனா இன்னும்பிடிபடாததால் 27 ஆண்டுகளாக இன்னும் முடிச்சி அவிழ்க்கப்படாத புதிராகவே உள்ளது.

ஓமனா...

எவ்வளவு அழகான பெயர்...

மலையாள தேசம் மட்டுமல்ல, தமிழகத்திலும் இந்த பெயருக்கு தனி ஈர்ப்பு உண்டு. அதே நேரம்... அழகிற்கு பின் ஆபத்து உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த பெயர், கடந்த 1996-ம் ஆண்டில் கேரளா மற்றும் தமிழகத்தையே கதி கலங்க வைத்தது.

ஆம்! ஒரு கொடூர கொலையில் சிக்கி, ஜாமீனில் வந்து தலைமறைவாகி இன்டர்போல் போலீஸ் வரை தேடப்பட்ட பெண் ஓமனா. இன்று அந்த ஓமனா இருக்கிறாரா? இல்லையா... என்பது தெரியாததால், அந்த கொடூர கொலை வழக்கும் இதுவரை முடிவுக்கு வரவில்லை. அப்படி என்ன நடந்தது?... ஓமனா யார்? என்பதைதான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம்.

சூட்கேசுடன் வந்த பெண்

1996-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி...

ஊட்டி வாடகை கார்கள் நிற்கும் இடத்துக்கு ஒரு பெண் பதற்றத்துடன் வருகிறார். அவரது கையில் பெரிய சூட்கேஸ் ஒன்று இருக்கிறது. அந்த பெண், அங்கிருந்த வாடகை கார் ஒன்றை நோக்கி வந்து நின்றார். தான் போக வேண்டிய ஒரு இடத்தை கூறி வாடகைக்கு வருமாறு கார் டிரைவரை அழைக்கிறார். டிரைவரும் அவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அப்போதும் அந்த பெண் பதற்றத்துடனே இருந்தார்.

துர்நாற்றத்தால் வந்த சந்தேகம்

கார் மலைப்பாதையில் ஓடிக்கொண்டு இருந்தது. வெளியில் இருந்து சில்லென்ற காற்றும் மெல்லியதாய் வந்தது. அந்த காற்றில் கலந்து வந்த துர்நாற்றம், டிரைவரின் மூக்கில் பட்டதும் அவருக்குள் ஏதோ போன்று இருந்தது. நீண்ட நேரம் வந்த துர்நாற்றம், எங்கிருந்து வருகிறது என்று யோசித்த டிரைவர், காருக்குள் இருந்த அந்த பெண்ணிடம்..., 'ஏதோ கெட்ட வாடை வீசுகிறது. பெட்டிக்குள் என்ன இருக்கிறது' என்று கேட்டார். இதைக்கேட்ட அந்த பெண், அது ஒன்றும் இல்லை என்று ஏதேதோ கூறி சமாளித்துள்ளார். ஆனால் டிரைவருக்கு அந்த வாடை ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்று எண்ணினார்.

சூட்கேசுக்குள் இருந்த அதிர்ச்சி

அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், காரை சாலையோரத்தில் நிறுத்தினார் டிரைவர். பின்னர் அந்த பெண்ணிடம், நான் டீ குடித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தனியாக சென்றார். அந்த பெண்ணின் கண்ணில் படாதவாறு, சற்று தொலைவுக்கு வந்த அவர், தனது காரில் வந்த பெண் பற்றியும், துர்நாற்றம் பற்றியும் போலீசாரிடம் கூறி, அவர்களை அங்கு அழைத்து வந்தார்.

போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, காரில் இருந்த அந்த பெண்ணை காணவில்லை. அவர் கொண்டு வந்த பெரிய சூட்கேஸ் மட்டும் அப்படியே இருந்தது. போலீசார், அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் துண்டு, துண்டுகளாக வெட்டப்பட்ட மனித மாமிசம் இருந்தது. இதைப்பார்த்து போலீசாரே அதிர்ந்து விட்டனர். அந்த சதைத்துண்டுகளில் இருந்து ரத்தம் எதுவும் வராமல் இருந்தது. இதைப்பார்த்த போலீசார் யாரோ ஒரு நபர் கொலை செய்யப்பட்டு துண்டு... துண்டாக வெட்டப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்தனர். அதே நேரம், கொல்லப்பட்டவருடைய தலை அந்த சூட்கேசில் இல்லை.

சிக்கினார் ஓமனா

இதையடுத்து ஊட்டி மேற்கு ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அந்த பெண்ணை தேடினர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கேரள மாநிலத்தை சேர்ந்த ஓமனா (வயது 37) என்பதும், திருமணமான அவர், கண் டாக்டர் என்பதும் தெரியவந்தது.

மேலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சூட்கேசுக்குள் சதைகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பையனூர் முரளிதரன் (36) என்பதும், விஷ ஊசி செலுத்தப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளி வந்தது. அவை அனைத்தும் அதிர்ச்சியூட்டும் ரகம்.

முறையற்ற உறவு

கேரள மாநிலம், கோழிக்ேகாடு மாவட்டம் பையனூரை சேர்ந்தவர், டாக்டர் ஓமனா ஈடாடன். கண் டாக்டரான இவர்திருமணமாகி கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அமைதியாக சென்று கொண்டு இருந்த அவரது வாழ்க்கையில் 1990-ம் ஆண்டு வேண்டாத விருந்தினராய் வந்தார் முரளிதரன்.

ஆம்!... 1990-ம் ஆண்டு ஓமனா, பையனூரில் தன் வீட்டின் அருகே புதிய வீடு கட்டினார். இதற்கு கட்டுமான ஒப்பந்ததாரராக வந்தார் முரளிதரன். முதலில் சாதாரணமாக தொடங்கிய அவர்களது பழக்கம், நாளடைவில் முறையற்ற உறவாக மாறியது.

'பிளாக் மெயில்'

இதற்கிடையே, ஓமனாவுக்கு மலேசியாவில் அரசு மருத்துவராக வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் மலேசியா சென்று, அரசு மருத்துவராக பணிபுரிந்து வந்தார். வெளிநாட்டு வேலை.... கைநிறைய சம்பளம்... இவையனைத்தும் ஓமனாவுக்கு முரளிதரனை மறக்கடித்தது. ஆனால் முரளிதரனுக்கோ, அது பெரும் இழப்பாக தெரிந்தது. மீண்டும் ஓமனாவை தன் வசப்படுத்த பல உத்திகளை கையாண்டார். மேலும், ஓமனாவை அடிக்கடி போனில் தொடர்பு கொண்ட முரளிதரன், அவர்களது அந்தரங்க உறவை அம்பலப்படுத்துவதாக கூறி 'பிளாக் மெயில்' செய்து, ஓமனாவிடம் இருந்து பணம் பறித்துள்ளார்.

வெளியே சொல்லமுடியாமல் தவித்த ஓமனா... மனநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட முரளிதரன், ஓமனா மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தொடர்பாக, மலேசிய அரசுக்கு புகார் அனுப்பினார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த மலேசிய அரசு, ஓமனா மீது நடவடிக்கை எடுத்தது. இதனால் தனது வேலையை ராஜினாமா செய்த ஓமனா, மீண்டும் கேரளாவுக்கு வந்தார்.

பழிவாங்க திட்டம்

தன்னை இந்த நிலைக்கு தள்ளிய முரளிதரனை பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டார் ஓமனா. அவரது திட்டப்படி முரளிதரனை நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அழைத்து வந்தார். நடக்கப்போகும் விபரீதத்தை உணராத முரளிதரன், நமது எண்ணப்படி எல்லாம் நன்றாக நடக்கிறது என்ற சந்தோஷத்தில் ஓமனாவுடன் ஊட்டி வந்தார். ஊட்டி பஸ் நிலையம் அருகேயுள்ள ரயில்வே விடுதியில் அறை எடுத்து தங்கிய இருவரும், காதல் ஜோடிகள்போல் சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.

கொடூர கொலை

ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்த முரளிதரன், அசந்து இருந்த ஒரு நாள் இரவு, ஓமனா தனது கோர முகத்தை காட்டினார். அன்று இரவு முரளிதரனுக்கு விஷ ஊசி போட்டு, அவரை ஓமனா கொலை செய்தார். தனக்கு தொல்லை தந்தவனை தீர்த்து கட்டிவிட்டோம். உடலை என்ன செய்வது என்று எண்ணியது ஓமனாவின் மருத்துவ மூளை. அப்போதுதான் அவருக்கு அந்த கொடூர எண்ணம் தோன்றியது. ஆம்! முரளிதரன் உடலை துண்டு, துண்டாக வெட்டி, சூட்கேசில் வைத்து எங்காவது வீசி விடுவது என்று முடிவு செய்தார். ஆனால் உடலை வெட்டும்போது ரத்தம் வெளியேறினால், அந்த வாடை காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்று நினைத்த ஓமனா, ரத்தம் உறையும் மருந்தை முரளிதரன் உடலில் செலுத்தி, ரத்த துளிகள் வெளிவராதவாறு உடலை துண்டு, துண்டாக கத்தியால் வெட்டினார். பின்னர் அந்த உடல் பாகங்களை பாலித்தீன் பையில் வைத்து, சூட்கேசில் அடைத்தார். அந்த சூட்கேசுடன், வாடகை காரில் கொடைக்கானலுக்கு புறப்பட்டபோதுதான், டிரைவரால் போலீசில் ஓமனா சிக்கினார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஜாமீன்... தலைமறைவு...

இந்த கொலை வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனிடையே, சிறையில் இருந்த ஓமனாவுக்கு, கடந்த 2001-ம் ஆண்டு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த ஓமனா, ஜாமீன் நிபந்தனைகளை கடைபிடிக்காமல், மலேசியாவுக்கு தப்பிச் சென்று தலைமறைவானார். இதையடுத்து ஓமனாவை 'தலைமறைவு குற்றவாளி' என்று போலீசார் அறிவித்தனர். அதன் அடிப்படையில், சர்வதேச போலீசாரின் (இன்டர்போல்) உதவியுடன் ஓமனாவை 16 ஆண்டுகளாக போலீசார் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.

குழப்பத்தை ஏற்படுத்திய செய்தி

இந்த நிலையில் மலேசியாவில் ஒரு கட்டிடத்தில் இருந்து ஒரு இந்தியப் பெண் சில ஆண்டுகளுக்கு முன் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார். அடையாளம் கண்டறியப்படாத அந்தப் பெண்ணின் உடல் நான்கு மாதங்கள் அந்த நாட்டு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அப்போது இந்தியத் தூதரகம் மூலமாக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் படத்துடன் அடையாளம் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேரளாவில் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. நாளிதழ்களில் அந்தச் செய்தி மற்றும் அதில் இருந்த போட்டோவை பார்த்த பலரும் அது ஓமனாவாக இருக்கலாம் என கூறினார்கள்.ஓமனாவின் குடும்பத்தினரும் கூட அது ஓமனா தான் என சொன்னார்கள்.

விடை தெரியாத கேள்வி

ஆனால், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், அது தங்கள் குடும்பத்தை சேர்ந்த மெர்லின் ரூபி எனவும், அவரை தேடி வருவதாகவும் சொன்னார்கள். உரிய அடையாளங்களைச் சமர்ப்பித்த மெர்லினின் உறவினர்கள், மலேசியாவில் இருந்து அந்த உடலைப் பெற்று இறுதிச் சடங்குகளை செய்தனர். அப்படியானால், ஓமனா என்ன ஆனார்? என்ற கேள்விக்கு இன்று வரை விடை தெரியவில்லை. இறந்த வேறு ஒரு பெண்ணை தான் என்று நம்பவைத்து, ஒமனா இன்னும் மலேசியாவில் பதுங்கி உள்ளாரா? என்ற சந்தேகமும் போலீசுக்கு உள்ளது. இதனிடையே முரளிதரன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஓமனா உயிருடன் உள்ளாரா? அல்லது இறந்துவிட்டாரா? என்று இன்னும் மர்மமாகவே உள்ளது. இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படாமல் இன்னும் நிலுவையிலேயே உள்ளது.

விசாரணை அதிகாரி சொல்வது என்ன?

இந்த வழக்கில் ஓமனாவை கைது செய்த, அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைமோகன் இது குறித்து கூறியதாவது:-

தன்னை 'பிளாக் மெயில்' செய்து தொல்லை கொடுத்து வந்த முரளிதரனை தீர்த்து கட்டிய ஓமனா, உடலை மறைக்க முயன்ற போது தான் சிக்கினார். கொலைக்கு பயன்படுத்திய விஷ ஊசி, துண்டு, துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்பாகங்கள், சூட்கேஸ் ஆகியவைதான் இந்த வழக்கில் முக்கிய தடயங்களாக ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஓமனாவின் நிலை இன்னும் மர்மமாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓமனா சிறந்த கண் டாக்டர்

ஓமனாவின் வக்கீல் ஆனந்த் கூறுகையில், ஓமனா, சிறந்த கண் டாக்டர், அவர் ஏழைகளுக்கு சேவை செய்யும் மனநிலை கொண்டவர். முரளிதரனின் அளவுக்கு அதிகமான தொல்லைதான், அவரை கொலை செய்யுமளவுக்கு, கொண்டு சென்றது. அதிக மனஉளைச்சல் காரணமாக அவர் மலேசியாவில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்.

ஓமனா... இன்றும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறார்...


Next Story