'வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது' - திருமாவளவன் குற்றச்சாட்டு


வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு
x

வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்து வருவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களில் எந்த மாறுபாடும் நடைபெறவில்லை என்பதை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது. வாக்குப்பதிவு நாளன்று 7 மணியளவில் வெளியிட்ட வாக்கு சதவிகிதமும், பின்னர் சில மணி நேரம் கழித்து வெளியிட்ட வாக்கு சதவிகிதமும் நிறைய இடைவெளியைக் கொண்டிருந்தது.

இது தொடர்பாக அரசியல் கட்சியினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இப்போது மறுபடியும் 11 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்கு சதவிகித விவரம் சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கிறது. இதில் பெரிய அளவிலான இடைவெளி இருப்பதை காணமுடிகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மேலும் சந்தேகத்தை எழுப்பக்கூடிய வகையிலும், தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தவர்கள் மீது கூடுதலாக ஐயத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் ஆணையம் இதனை தெளிவுபடுத்த வேண்டும். இதில் எந்த மாறுபாடும் நடைபெறவில்லை என்பதை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்."


இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.




Next Story