பிரதமர் மோடி 4-வது முறையாக இன்று மீண்டும் கர்நாடகம் வருகை


பிரதமர் மோடி 4-வது முறையாக இன்று மீண்டும் கர்நாடகம் வருகை
x
தினத்தந்தி 20 April 2024 12:00 AM GMT (Updated: 20 April 2024 12:00 AM GMT)

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக வருகிற 26, மே 7-ந் தேதி நடைபெற உள்ளது.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி 4-வது முறையாக இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். சிக்பள்ளாப்பூர், பெங்களூருவில் பிரசாரம் மேற்கொண்டு அவர் ஆதரவு திரட்ட உள்ளார்.

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக வருகிற 26, மே 7-ந் தேதி நடைபெற உள்ளது. பெங்களூரு உள்பட அதனை சுற்றியுள்ள 14 தொகுதிகளில் இந்த முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் களத்தில் 247 பேர் உள்ளனர். இந்த தொகுதிகளில் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி 3 முறை கர்நாடகம் வந்து பிரசார பொதுக்கூட்டம், வாகன பேரணியில் பங்கேற்று உள்ளார். அதாவது, கலபுரகி, சிவமொக்கா, மைசூரு, மங்களூரு ஆகிய நகரங்களில் அவர் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 4-வது முறையாக அவர் மீண்டும் இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.

சிறப்பு விமானம் மூலம் கர்நாடகம் வரும் அவர், சிக்பள்ளாப்பூரில் நடைபெறும் பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதை முடித்துக் கொண்டு அவர் மாலை 6 மணியளவில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதில் பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூரு மற்றும் சிக்பள்ளாப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 23, 24-ந் தேதி ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்.

24-ந் தேதி உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சிக்கமகளூரு, உடுப்பி உள்ளிட்ட நகரங்களில் வாக்கு சேகரிக்கிறார். கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தலைவர்களின் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. கட்சிகளின் தேசிய தலைவா்கள் கர்நாடகத்தை முற்றுகையிட்டு ஆதரவு திரட்டுகிறாா்கள்.


Next Story