ஒடிசா மக்கள் நவீன் பட்நாயக்குக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்து விட்டனர் - ஜே.பி.நட்டா


ஒடிசா மக்கள் நவீன் பட்நாயக்குக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்து விட்டனர் - ஜே.பி.நட்டா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 16 May 2024 10:54 PM GMT (Updated: 17 May 2024 2:47 AM GMT)

பா.ஜனதா ஆட்சியை தேர்ந்தெடுக்க ஒடிசா மக்கள் முடிவு செய்துவிட்டது தெளிவாக தெரிவதாக ஜே.பி.நட்டா கூறினார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. பிஜு ஜனதாதளம், பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி மற்றும் அசாம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களின் பா.ஜனதா முதல்-மந்திரிகள் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரம் செய்துள்ளனர். ஒடிசாவில் கட்டாக் நகரில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் வாகன பேரணி நடத்திய நிலையில், நேற்று தலைநகர் புவனேஸ்வரில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகன பேரணி நடத்தினார்.

வாகன பேரணிக்கிடையே நட்டா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "மக்களின் ஆர்வத்தை பார்த்தால், 24 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் நவீன் பட்நாயக்குக்கு ஓய்வு கொடுக்கவும், பா.ஜனதா ஆட்சியை தேர்ந்தெடுக்கவும் ஒடிசா மக்கள் முடிவு செய்துவிட்டது தெளிவாக தெரிகிறது.

கடந்த 13-ந் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலின் போக்கை பார்த்தால், பிஜு ஜனதாதளம், ஆட்சியை இழக்கப் போகிறது. ஒடிசாவில் பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்கவில்லை. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில் முதல்-மந்திரியை தேர்வு செய்து விட்டோம். அதுபோல், ஒடிசாவிலும் முதல்-மந்திரியை தேர்வு செய்வோம்" என்று அவர் கூறினார்.


Next Story