ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார் - ராகுல்காந்தி


ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார் - ராகுல்காந்தி
x

கோப்புப்படம்

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுவதாக ராகுல்காந்தி தனது வலைத்தள பதிவில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ராகுல்காந்தியின் பேச்சுகள் பா.ஜனதாவால் எப்படி திரித்துக்கூறப்பட்டன?, உண்மை என்ன? பொய் என்ன என்பது பற்றி காங்கிரஸ் கட்சி அந்த வீடியோவை தயாரித்துள்ளது.

அத்துடன், ஒரு பதிவையும் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில், "தனது பொய் தொழிற்சாலை மூலம் பா.ஜனதா தனக்குத்தானே எவ்வளவு ஆறுதல் சொல்லிக்கொண்டாலும் எந்த மாற்றமும் ஏற்படாது. ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு, மோடி பிரதமராக இருக்க மாட்டார் என்று நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் 'இந்தியா' கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஒடிசா மாநிலம் பொலாங்கிரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

கையில் அரசியல் சட்ட நகலை ஏந்தியபடி, கூட்டத்தில் பேசிய அவர், "தற்போதைய தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால், தலித், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும். நாடு, 22 கோடீஸ்வரர்களால் நடத்தப்படும். அதனால்தான் மக்கள் அரசு அமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம். அரசியல் சட்டத்தை கிழித்து வீசவும் பா.ஜனதா விரும்புகிறது. காங்கிரசில் இருக்கும் நாங்களும், நாட்டு மக்களும் இதை அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் பேசினார்.


Next Story