காங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி; பிரதமர் மோடி தாக்கு


காங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி; பிரதமர் மோடி தாக்கு
x

காங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (20ம் தேதி) 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, 6ம் கட்ட தேர்தல் 25ம் தேதியும் 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி வடக்கு-கிழக்கு தொகுதியில் பிரதமர் மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,

காங்கிரஸ் - ஆம் ஆத்மி டெல்லியில் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளது. ஒரு ஊழல் கட்சி மற்றொரு ஊழல் கட்சியை காப்பாற்றுவதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. வாக்கு அரசியலுக்காக இந்தியா கூடணி எந்த எல்லைக்கும் செல்லும்.

2014ம் ஆண்டு தேர்தலின்போது காங்கிரஸ் அரசு வாக்குகளுக்காக டெல்லியின் முக்கிய பகுதியில் 123 இடங்களை வக்பு வாரியத்திற்கு வழங்கியது. காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி டெல்லியை அழிக்க முடிவுடன் உள்ளன. அரசியலின் தரம் குறைய அந்த கூட்டணியின் தலைவர்கள்தான் காரணம். அவர்கள் மக்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டனர்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story