'தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலம் தமிழ்நாடு' - அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின் பேச்சு


தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலம் தமிழ்நாடு - அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 30 Aug 2024 2:31 AM GMT (Updated: 30 Aug 2024 4:36 AM GMT)

'தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வாஷிங்டன்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-

"தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் செயற்கை நுண்ணறிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஏராளமான முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவு எழுச்சி கண்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது திட்டத்தை தொடங்கி உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த இந்த மாநாடு உதவும். புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story