விடுதலைப்போர் வீரர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு: வெடித்த போராட்டம் - 6 பேர் பலி


விடுதலைப்போர் வீரர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு: வெடித்த போராட்டம் - 6 பேர் பலி
x
தினத்தந்தி 17 July 2024 10:19 AM GMT (Updated: 17 July 2024 2:44 PM GMT)

வங்காளதேச விடுதலைப்போரில் பங்கேற்ற வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

டாக்கா,

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த வங்காளதேசம் 1971ம் ஆண்டு தனிநாடாக சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திர போராட்டத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். மேலும், இந்த விடுதலை போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனிடையே, வங்காளதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 3 ஆயிரம் அரசு வேலைக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கானோர் அதற்கு விண்ணப்பித்தனர். ஆனால், இதில் 30 சதவீத சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பல ஆண்டுகளாக விவாதப்பொருளாக இருந்து வந்தது.

இந்நிலையில், அரசு வேலையில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வங்காளதேசத்தில் போராட்டம் வெடித்தது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டக்காரர்களை அந்நாட்டு அரசு அடக்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். அதேவேளை, இந்த போராட்டத்தில் இதுவரை 3 மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ-மாணவிகள் உடனடியாக விடுதிகளை காலி செய்துவிட்டு வெளியேறும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்காளதேசம் முழுவதும் போராட்டம் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story