இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமனம்


இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமனம்
x
தினத்தந்தி 24 Sep 2024 10:30 AM GMT (Updated: 24 Sep 2024 11:42 AM GMT)

நீதி, கல்வி, தொழில்துறை மந்திரியாகவும் டாக்டர் ஹரிணி அமரசூரியா பதவியேற்றார்.

கொழும்பு:

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயகே (வயது 56) வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றார். இதையடுத்து புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பிரதமர் தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.

இந்நிலையில், அதிபர் திசநாயகே தலைமையில் 4 பேர் கொண்ட இடைக்கால மந்திரிசபை இன்று பதவியேற்றது. தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரியா (வயது 54) பிரதமராக பதவியேற்றார். நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் துறை மந்திரியாகவும் பதவியேற்றார். இதன்மூலம் இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி பெற்றுள்ளார்.

இதேபோல் மந்திரிகளாக விஜிதா ஹெராத், லக்ஷ்மண் நிபுணராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பிரதமர் மற்றும் மந்திரிகளுக்கு அதிபர் திசநாயகே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. நவம்பர் இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.


Next Story