ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்- பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
ரஷியாவில் தேவாலயங்களை தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
மாஸ்கோ,
ரஷியாவின் காகசஸ் மாகாணம் தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது டெர்பென்ட் நகரில் உள்ள தேவாலயத்துக்குள் புகுந்து நிகோலாய் கோடெல்னிகோவ் (வயது 66) என்ற பாதிரியாரை அவர்கள் கழுத்தை அறுத்து கொன்றனர். இதனால் அங்கிருந்தவர்கள் தேவாலய அறைக்குள் ஓடிச்சென்று கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டனர். சில மதவழிபாட்டு தலங்களை தீவைத்தும் கொளுத்தினர்.
அதன்பின்னர் பயங்கரவாதிகள் அங்குள்ள போலீஸ் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும் இந்த தாக்குதலில் பாதிரியார், போலீசார் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை தற்போது 21 ஆக உயர்ந்துள்ளது.