வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்


வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்
x
தினத்தந்தி 7 Aug 2024 12:17 AM GMT (Updated: 7 Aug 2024 11:21 AM GMT)

வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்கா,

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாட்டு விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். மேலும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தளபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவின் பிரதிநிதிகளுடன் அதிபர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிசை இடைக்கால அரசின் தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் அமைய உள்ள இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிசை நியமித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story