12 குழந்தைகள் பலி எதிரொலி; லெபனானை தாக்கிய இஸ்ரேல்


12 குழந்தைகள் பலி எதிரொலி; லெபனானை தாக்கிய இஸ்ரேல்
x
தினத்தந்தி 30 July 2024 9:37 PM GMT (Updated: 30 July 2024 11:26 PM GMT)

லெபனான் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானம், 3 ராக்கெட்டுகளை ஏவி தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார்.

பெய்ரூட்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

அந்த நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களில் ஒரு சிலரை இஸ்ரேல் மீட்டது.

எனினும், காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் திடீரென சில நாட்களுக்கு முன் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த திடீர் தாக்குதலில், குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதற்கு முன், லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் வான்வழியே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுவை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா குழுவினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியை இலக்காக கொண்டு நேற்று கடுமையாக தாக்கினர்.

இஸ்ரேல் மக்கள் படுகொலைக்கு பொறுப்பான ஹிஜ்புல்லா அமைப்பை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என அதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆளில்லா விமானம் கொண்டு 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதில் பெண் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்து உள்ளனர் என லெபனான் நாட்டு ஊடக தகவல் தெரிவிக்கின்றது. இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு லெபனானில் உள்ள ஈரான் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.


Next Story