பாகிஸ்தானில் இன்று அடுத்தடுத்து பேருந்து விபத்துகள்.. 37 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தானில் பேருந்து விபத்து.. 11 பேர் பலி
x
தினத்தந்தி 25 Aug 2024 8:14 AM GMT (Updated: 25 Aug 2024 11:47 AM GMT)

ஈரானில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து, பிரேக் பிடிக்காததால் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

கராச்சி:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், லாஸ்பெலா மாவட்டத்தில், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு இன்று பஞ்சாப் நோக்கி சென்ற பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் லாகூர் அல்லது குர்ரன்வாலாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட பஞ்சாப் முதல்-மந்திரி மர்யம் நவாஸ் ஷெரீப், தனது கவலையையும் இரங்கலையும் தெரிவித்தார்.

மற்றொரு விபத்து

இதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்து உருக்குலைந்தது. பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் உள்ளூர் மக்கள் மீட்பு பணியை தொடங்கினர். பேருந்துக்குள் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்கள் அனைவரும் சாதனோதி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


Next Story