மழை பாதிப்பு: பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


மழை பாதிப்பு: பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"கடந்த ஒரு வார காலமாக பருவ மழை மற்றும் பெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கனமழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சுமார் 12 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலையில், பெஞ்சல் புயலினால் பெய்த கனமழை காரணமாக சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற் பயிர்கள் மழை நீர் மற்றும் வெள்ளத்தால் மூழ்கி முழுமையாக சேதமடைந்துள்ளன என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

ஏற்கெனவே, கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு ஸ்டாலினின் திமுக அரசு பயிர் காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ஹெக்டேருக்கு பயிர் காப்பீட்டுத் தொகையாக வழங்கும் ரூ.84,000/- கிடைக்கப் பெறவில்லை. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.34,000/- நிவாரணமாக வழங்க நான் வலியுறுத்தினேன். ஆனால், அந்த தொகையையும் ஸ்டாலினின் திமுக அரசு வழங்கவில்லை.

குறிப்பாக, தேசியப் பேரிடர் நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000/-மாக அறிவித்த நிவாரணத் தொகையினைக் கூட வழங்காமல், குறைத்து ரூ.13,500/-ஐ மட்டுமே இந்த அரசு வழங்கியது. அதையும் முழுமையாக கணக்கெடுத்து வழங்கவில்லை. இந்நிலையில், தற்போது புயல் மழையில் மீண்டும் விவசாயப் பெருமக்கள் கடன் வாங்கி பயிரிட்டிருந்த பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

பெஞ்சல் புயலினால் பெய்த கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளநீரால் மூழ்கியுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களை வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று முழுமையாகக் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக முழு நிவாரணத் தொகையினையும் வழங்கிடுமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ் நாட்டில் கன மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக நிவாரணம் வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், பெஞ்சல் புயலின் காரணமாக கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீர்செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை நேரில் சென்று வழங்கிடுமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story