திண்டுக்கல்லில் 40 மணி நேரம் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு
திண்டுக்கல்லில் 40 மணி நேரம் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில், தாடிக்கொம்பு சாலையில் உள்ள கருப்பணசாமி கோவில் பகுதியை சேர்ந்த நகைக்கடை அதிபர்கள் தினேஷ், தீரஜ். இவர்களுக்கு சொந்தமாக திண்டுக்கல் ஆர்.எஸ். சாலை, மேற்கு ரதவீதி, ஒட்டன்சத்திரம் ஆகிய 3 இடங்களில் ஒரிஜினல் வாசவி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் உள்ளன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு திருச்சி, சென்னை, மதுரை ஆகிய ஊர்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 25 பேர் திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்துக்கு வந்தனர். பின்னர் ஒரே நேரத்தில் திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் 3 நகைக்கடைகள், நகைக்கடை அதிபா்களின் 2 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது நகைக்கடைகளுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. மேலும் வீடுகள் மற்றும் நகைக்கடைகளில் இருந்த கணினிகள், ஆவணங்களை ஆய்வு செய்தனர். நகைகளின் விற்பனை விவரம், வருமான வரிசெலுத்திய விவரம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தனர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னரே வீடுகள், நகைக்கடைகளில் இருந்து அதிகாரிகள் வெளியே சென்றனர். ஆனால் அங்கிருந்து வெளியேறிய வருமான வரித்துறை அதிகாரிகள் அந்தந்த ஊர்களுக்கு செல்லவில்லை. மேலும் திண்டுக்கல்லில் ஒரு தனியார் விடுதியில் 10 அறைகளை எடுத்து இரவு தங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு மீண்டும் நகைக்கடை அதிபர்களின் 2 வீடுகள், திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் 3 நகைக்கடைகளுக்கு வந்தனர்.
பின்னர் நகைக்கடைகளை பூட்டிக்கொண்டு 2-வது நாளாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் 3 நகைக்கடைகளிலும் நேற்றும் விற்பனை நடைபெறவில்லை. அதேபோல் நகைக்கடை அதிபர்களின் வீடுகளிலும் சல்லடை போட்டு ஏதேனும் ஆவணங்கள் சிக்குமா? என்று சோதனை செய்தனர். வீட்டில் இருந்தவர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் நகைக்கடைகளுக்கு தராசுகளை கொண்டு வந்து நகைகளின் இருப்பு விவரத்தை கணக்கிட்டனர். பின்னர் நகைகளை எடை போட்ட தராசுகளை வெளியே எடுத்து சென்றனர். இதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் நகைக்கடைகளில் இருந்து வெளியேறி காரில் மின்னல் வேகத்தில் செல்வதும், திரும்பி வருவதுமாக இருந்தனர்.
வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையால் திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் நகைக்கடைகள் இருந்த பகுதிகள் பரபரப்பாக இருந்தது. இதற்கிடையே நகைக்கடை அதிபர்களின் 2 வீடுகள், திண்டுக்கல் மேற்கு ரதவீதி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருக்கும் நகைக்கடைகளில் மதியம் சுமார் 2 மணி அளவில் சோதனை நிறைவுபெற்றது. இந்த 4 இடங்களிலும் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த ஆவணங்கள் அனைத்தையும் 10 பைகளில் திண்டுக்கல் நாகல்நகர் ஆர்.எஸ்.சாலையில் இருக்கும் நகைக்கடைக்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர். அங்கு ஆவணங்களில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனை தொடர்ந்து நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு பின்னரும் சோதனை நீடித்தது.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் 3 நகைக் கடைகள் மற்றும் நகைக்கடை உரிமையாளரின் 2 வீடுகளில் 40 மணி நேரம் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.