மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுப்பா ? த.வெ.க. விளக்கம்


மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுப்பா ? த.வெ.க. விளக்கம்
x
தினத்தந்தி 25 Sep 2024 9:31 AM GMT (Updated: 25 Sep 2024 9:45 AM GMT)

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் நடத்தப்படும் என்று விஜய் அறிவித்தார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை இம்மாதம் 23-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதாகவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு ஏற்கனவே காவல்துறையிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர். இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாட்கள் இல்லை என்பதாலும், இதனிடையே விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியானதாலும், மாநாடு தேதி தள்ளிப்போனது.

மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதையடுத்து அந்த தகவலை மீண்டும் மனு மூலம் காவல்துறையிடம் கொடுத்தனர்.

த.வெ.க. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் பரவியது.இந்த நிலையில், இது தொடர்பாக த.வெ.க. தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி , மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என வெளிவரும் செய்தி தவறானது. மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. தேதி மாற்றம் குறித்தும் காவல்துறையிடம் மனு மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது; காவல்துறை சார்பில் வழங்கபட்ட 33 நிபந்தனைகளுக்கும் கட்சி சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என த.வெ.க. தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


Next Story