ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை - ஜெயக்குமார் பேட்டி


ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை -  ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 15 Jun 2024 12:12 PM GMT (Updated: 15 Jun 2024 12:47 PM GMT)

ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதேவேளை, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தலைமையில் இன்று அக்கட்சி கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ,

ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தி.மு.க. ஆட்சியில் இருக்கும்வரை இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது. பணம், படை பலத்தை கொண்டு பரிசுகளை அள்ளிக்கொடுத்து போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சிக்கும். ஜனநாயக ரீதியில் இடைத்தேர்தல் நடந்தால், அ.தி.மு.க.வே வெற்றி பெறும், அது நடக்காது என்பதால் தான் புறக்கணிக்கிறோம்.என தெரிவித்தார்.


Next Story