தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது


தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது
x
தினத்தந்தி 6 Jun 2024 1:20 AM GMT (Updated: 6 Jun 2024 7:02 AM GMT)

தேர்தல் நடத்தை விதிகளால் தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந் தேதி (அதாவது இன்று) வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அதன்படி, ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தப்பட்டு வந்தது.

இந்த சோதனையில் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், மதுபான வகைகள், இலவச பரிசுப்பொருட்கள், போதை பொருட்கள் என ரூ.1,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் காட்டப்பட்ட பொருட்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன. தமிழகத்திலும், பக்கத்து மாநிலங்களிலும் தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் 4-ம் தேதி வெளியிடப்பட்டுவிட்டன. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவோடு தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுகின்றன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story