குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் தமிழ்நாடு  முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Jun 2024 9:23 AM GMT (Updated: 11 Jun 2024 10:26 AM GMT)

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி "குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" கடை பிடிக்கப்பட்டு வருகிறது.கல்வி, விளையாட்டு என்று வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தை பருவத்தில், சில குழந்தைகள் தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் உழைப்பது மிகவும் கொடுமையான செயலாகும். இது அவர்களது எதிர்காலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், ஊறுவிளைவிக்க கூடியதாகும்.பெற்றோர்களுக்கு போதிய வருமானம் இல்லாமையினாலும் குடும்ப சூழ்நிலைகளினாலும் குழந்தை தொழிலாளர்களாக மாறிய குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு தரமான கல்வி அளித்திடவும், பெற்றோர்களின் சுமைகளை குறைத்திடவும், அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.தற்போது, பொதுமக்களும் வேலை அளிப்போரும் இப்பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தவிர்த்து வருகின்றனர்.

மாவட்ட கலெக்டர்களும் அரசு அலுவலர்களும் தங்களது மாவட்டங்களை குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற மாவட்டமாக அறிவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசின் இந்த சீரிய முயற்சிகளால் தமிழகமெங்கும் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற இலக்கினை 2025-ம் ஆண்டிற்குள் அடைவோம் என்பது உறுதி.14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனைத்து வகையான தொழில்களிலும் வேலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்களும், பணியில் அமர்த்த மாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதி பூண்டு, நம் நாட்டை வளமிக்க ஒன்றாக மாற்றுவோம் என சூளுரைப்போம். தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றிடுவோம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story