மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலக பொறுப்பு ஆசிரியர்


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலக பொறுப்பு ஆசிரியர்
x
தினத்தந்தி 12 July 2024 9:47 AM GMT (Updated: 12 July 2024 9:54 AM GMT)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலக பொறுப்பு ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை வடவள்ளி அருகே டெல்லி பப்ளிக் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நூலக பொறுப்பு ஆசிரியராக பால்ராஜ் (வயது 30) என்பவர் பணி புரிந்து வந்தார்.

இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். நாளுக்கு நாள் அவரது தொல்லை தாங்கமுடியாமல் மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் உடனே பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பால்ராஜ் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி, குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் தனித்தனியாக நடந்த விசாரணையில், மேலும் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிருந்தா நடந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story